Name:
Location: Chennai, Tamilnadu, India

Arulselvan is a staff of the Electronic Media Production and Research Centre of Tamil Nadu Open University, Guindy, Chennai, Tamilnadu. He can be reached at arulselvans@yahoo.com Dr S Angayarkanni is a Tamil Lecturer, working in a private college in Chennai

Wednesday, April 19, 2006

திருவாசகத்தில் வழிபாட்டு முறைகள்

உ. கருப்பத்தேவன், எம்.ஏ., எம்.ஃபில்.,

முன்னுரை

மாணிக்கவாசகர் பாடிய எட்டாம் திருமுறையாகிய திருவாசகம் மிகச்சிறந்த சிவநெறிப் பனுவல் ஆகும். பக்தி இலக்கியங்களுள் தலைமை சான்றது. உயிர்களைப் பிணித்துள்ள வலிய தளைகளை நீக்கிப் பேரின்பத்தைத் தரும் இயல்புடையது திருவாசகமாகும். இறைவனுக்கே தம்முடைய கருவி கரணங்களை அர்ப்பணம் செய்து, சிவனைக் கண்டு இன்புற்று வழிபட்ட மாணிக்கவாசகரின் இறைவழிபாட்டு நெறியில், இறையன்பில் பல்வேறு நிலைகள் காணப்படுகின்றன. ‘திருவாசகத்தில் வழிபாட்டு முறைகள்’ என்னும் பொருளில் அமைந்துள்ள இக்கட்டுரை, அதனை விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துரைப்பதாக அமைகின்றது.
வழிபாடு பற்றிய விளக்கங்கள்
கருணை வள்ளலும் அருட்குரவனுமான இறைவனை, உயிர்கள் தங்கள் பக்குவநிலைகளுக்கு ஏற்பத், தம்முள் பதித்து வைத்துள்ளன. தம்முள் பதிந்த இறை உருவங்களில் மனத்தைப் பதித்த உயிர்கள், அவ்வுருவங்களோடு ஒன்றி விடுகின்றன. இதனால் உயிர்கள் அமைதியும் இன்பமும் பெறுகின்றன.
“ ‘வழிபாடு’ என்ற சொல்லுக்கு, “வழியில் செல்லுக, பின்பற்றுக, வணக்கம், பஜனை, சமயக்கோட்பாடு” முதலான’ பல பொருட்களைக் கழகத் தமிழகராதி தருகின்றது, ‘வழிபாடு’ என்பது ‘வழிபடுதல்’ என்னும் பொருளுக்குரிய சொல்லாகும். ‘வழிபடு’ என்னும் தொழிற்பெயர், பெயர்ச் சொல்லாக மாறும்போது ஈற்றயல் நீண்டு வழிபாடு என்றாகின்றது. ‘பண்படு’ என்னும் சொல் ‘பண்பாடு’ என்றாகியது போல இச்சொல்லும் உள்ளது. ‘வழி’ என்பதற்கு ‘நெறி’ என்றும் ‘படு’ என்பதற்குச் ‘செல்லுதல்’, ‘பொருந்துதல்’, என்றும் பொருள் கற்பிக்கப்பட்டு இறையடியவர்களும் ஞானிகளும் அறிஞர்களும் காட்டியுள்ள நெறியில் செல்லுக என்று அறிவுறுத்தும் பாங்கில் இச்சொல் இன்று ஆளப்பட்டு வருவதைக் காண்கின்றோம். இறைவனை, வழிபாட்டுச் சொற்களைக் கொண்டு பாமாலை தொடுத்து வழிபடுவதை, நாம் வழிபாடு எனக் கொள்ளலாம்.
மூவகை வழிபாடு
வழிபாடு இலிங்க வழிபாடு, குர வழிபாடு, சங்கம வழிபாடு என மூவகைப்படும். எல்லாவற்றுக்கும் முதலாகவும் முடிவாகவும் விளங்கும் சிவனை வழிபடுவது சிவவழிபாடு அல்லது இலிங்கவழிபாடு ஆகும். அவ்விறைவனை வழிபடும் நெறியை அறிவுறுத்தும் ஆசிரியர்களைப் போற்றி வழிபடுவது குருவழிபாடு என்றழைக்கப்பெறும். இத்தகைய வழிபாட்டின் பயன்கள் என்றும் நிலைத்து நிற்றல் வேண்டி இறையடிவர்களை வணங்குவதுடன் அவர்களுடன் உறைவது சங்கம வழிபாடு ஆகும். இம்மூன்று வழிபாட்டு நெறிகளையும் பரஞ்சோதி முனிவர் தம்முடைய திருவிளையாடற் புராணத்தில் வேதத்திற்குப் பொருளருளிச் செய்த படலத்தில் விளக்குகின்றார்.
“கிரியையால் ஞானம் தன்னால் கிளர்சிவ பத்தி, பூசை
தரிசனம் சைவலிங்க தாபனம் செய்தல் ஈசற்கு
உரிய மெய்யன்பர் பூசை உருத்திர சின்னம் தாங்கல்
அரியதே சிவன்பாற் பத்தி அனைத்தையும் தெரியலாகும்” (பாடல் எண் 4)
இப்பாடலின் வழி இலிங்க, குரு, சங்கம வழிபாட்டினைச் சிவனே கூறுவதாகப் பரஞ்சோதியார் பாடியுள்ளார். வேதத்திற்குப் பொருள் சொல்லும் பாங்கில் கிரியைகளாலும் ஞானங்களாலும் அறியக்கூடிய வழிபாடுகளை, அவர் கூறியுள்ளார். விளக்கம் தரும் சிவபக்தி, சிவபூசை, சிவதரிசனம், சிவலிங்கம் நிறுவுதல், சிவனுக்கு மெய்யடியார்கள் செய்யக்கூடிய பூசைகள், சிவசின்னம் தாங்குதல், அரிய குருபக்தி ஆகிய அனைத்தையும் மறைவழி உணரலாம் என்று சிவன் கூற்றாக வைத்துப் பாடியுள்ளார் பரஞ்சோதி முனிவர். பெரியபுராணத்துள் சங்கம வழிபாட்டினையும் திருவிளையாடற் புராணத்துள் சிவலிங்க வழிபாடு, குருவழிபாடு ஆகிய இரண்டினையும் பரவலாகக் காணுகின்றோம்.
நால்வர் வழிபாட்டு நெறி
ஆன்மா, இறைவனைச் சார்ந்து இன்புறுதலையே ‘முக்தி’ என்று ஆன்றோர் குறிப்பிட்டுள்ளனர். முக்தி அடைவதற்குரிய வழிபாட்டு நெறிமுறைகளைத் தோத்திர நூல்களும் சாத்திர நூல்களும் நான்காகப் பகுத்துக் கூறியுள்ளன. அவை சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பனவாகும். இவற்றை முறையே தாச மார்க்கம் என்னும் தொண்டு நெறி, சற்புத்திர மார்க்கம் என்னும் நன்மகன்மை நெறி, சகமார்க்கம் என்னும் தோழமை நெறி, சன்மார்க்கம் என்னும் ஞானநெறி எனக் கூறியுள்ளனர். திருநாவுக்கரசர் தொண்டு நெறியிலும், திருஞானசம்பந்தர் நன்மகன்மை நெறியிலும், சுந்தரர் தோழமை நெறியிலும், மாணிக்கவாசகர் ஞானநெறியிலும் நின்று இறைவனை வணங்கி வழிபட்டு வந்துள்ளனர்.
திருவாசகத்தில் வழிபாட்டு முறைகள்
உயிர்கள், தம்மை அறிந்துகொண்டு தெளிந்த நிலையில் எளிய முறையில் இறைவனைக் காண்பதற்குப் பயன்படும் படிநிலையே வழிபாடாகும். மாணிக்கவாசகர் பக்திநெறி, மறையவர்களின் வேதநெறி, அன்புநெறி ஆகிய மூன்று நெறிகளையும் ஒருங்கே பெற்றவர். அவர் சைவ சமயத்தைத் தம் சிவ வழிபாட்டால் வளர்த்தார். வழிபாடு என்னும் பூசை, சைவ மரபின் இன்றியமையாத கூறு ஆகும். உடல், உள்ளம், உயிர் ஆகியனவற்றின் குற்றங்களைக் களைவதற்கு மேற்கொள்ளும் பயிற்சியே வழிபாடு ஆகும். மாணிக்கவாசகர் தம்முடைய திருவாசகப் பாடல்களில் மனம், வாக்கு, மெய் ஆகிய மூன்றினையும் இறையின்பத்தைத் துய்ப்பதற்காகவே பயன்படுத்தியதாகப் பாடியுள்ளார். அவர் பரம்பொருளாகிய சிவனை மனம் நினைக்கவும், வாய் வாழ்த்தவும், கை வணங்கவும் ஒருமித்த சிந்தனையுடன் வழிபட்டார். “மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்த” வழிபாட்டு நெறியில் அவர் சிவத்தைக் கண்டார். பரம்பொருளாகிய சிவத்தை இமைப்பொழுதும் மறவாமல் நினைந்து அதிலேயே அழுந்தி நின்று இறைவன்முன் மனமொன்றிய வழிபாட்டினை - இறையருட் செயலை உணர்த்துவது மாணிக்கவாசகரின் திருவாசகப் பாடல்கள் ஆகும். இறையன்பில் இன்பமும், உலக அன்பில் பற்றும் இல்லாத இறையடியவர்களுக்கு மாணிக்கவாசகரின் திருவாசகப் பாடல்கள் காட்டும் வழிபாட்டுமுறை, ஒளியூட்டி வழிகாட்டுவதாகும். ஊன், உயிர், உணர்வு, உள்ளம் ஆகியன கெட்டு, பித்த நிலையில் சிவபரம்பொருளோடு ஒன்றுபட்ட நிலையில் வழிபட்ட மாணிக்கவாசகரின் வழிபாட்டு முறைகளைத் திருவாசகத்தின் ஒவ்வொரு பதிகமும் வெளிப்படுத்துகின்றது. திருவாசகம் காட்டும் வழிபாட்டு முறைகளை, 1. பேரின்பத்தில் திளைத்தல்; 2. அகங்குழைந்து வழிபடுதல்; 3. இறையருளோடு கலத்தல்; 4. இறையன்பில் உறுதி; என வகைப்படுத்தி இக்கட்டுரையில் விளக்கலாம்.
1. பேரின்பத்தில் திளைத்தல்
ஆன்மா சில சமயங்களில் தான் பெற வேண்டிய பேரின்பத்தை மறந்து உலக இன்பங்களைத் துய்ப்பதன் மூலம் துயரமடைகின்றது. பேரானந்தத்தைத் தரக்கூடிய பரம்பொருளாகிய சிவனைச் சேர்ந்திருக்கும்போது ஆன்மா தூய்மை பெறுகின்றது. சிவனின் கருணை, உள்ளம் கலந்து உணர்வாக நின்று உள்ளத்தை உருகச்செய்யும் இயல்புடையதாகும். அக்கருணையை இறையருளால் - இறைவழிபாட்டால் பெறமுடியும் என மனம் நைந்து மாணிக்கவாசகர் திருவாசகத்தில் பாடுகின்றார். சிவன், தன்பால் பக்தியும் அன்பும் கொண்ட இறையன்பர்களின் மனத்துயரங்களைத் தீர்த்து அருள்பாலிக்கின்றார். அவ்வாறு இறையருள் பெற்ற மாணிக்கவாசகரின் உள்ளம் உருகுகின்றது. பேரின்பத்தில் திளைக்கின்றது. இறைவழிபாட்டின் இந்நிலையில் நின்று மாணிக்கவாசகர் அச்சோப்பதிகத்தில்,
“சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே” (1)
எனப்பாடுகின்றார். இவ்வாறு அவர் சிவபரம்பொருளாகிய பேரின்பத்தில் அழுந்திநின்று பரத்தைச் சார்தல் வேண்டும் என இறைவனிடம் முறையீடு செய்கின்றார்.
@2. அகங்குழைந்து வழிபடுதல்
ஆன்மாவிற்கு இறைவன்மேல் தீராத பக்தி வேண்டும். இறைவனது பேராற்றலை அடைய விரும்பும் இறையடியவர்கள், என்றும் மாறாத பக்தியால் தங்களை இறைவனிடம் அடைக்கலப்படுத்திக் கொள்ள வேண்டும்.
“ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு
அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே” (சிவஞானபோதம், 8)
என்னும் சிவஞானபோத சூத்திரம், ஐம்புல இன்பங்களில் சிக்கித் தவிக்கும் உயிர்களுக்குச் சிவன் ஞானாசிரியனாக வந்து உண்மை ஞானத்தை உணர்த்துவான் எனக் குறிப்பிடுகின்றது. இறைவழிபாட்டில் இத்தகைய உண்மை ஞானத்தை மாணிக்கவாசகர் மிக எளிதாகவே பெற்றார். அந்த உணர்வின் வெளிப்பாடாகவே அவர் திருவாசகத்தில், இறைவழிபாட்டில் “மயிர்சிலிர்த்தல், நடுக்கம் உண்டாதல், கண்ணீர் அரும்புதல்” என்னும் வழிபாட்டு முறைகளைப் பாடியுள்ளார்.
“மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து உன்விரையார் கழற்கென்
கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி” (திருச்சதகம், 1)
இந்த நிலையில்தான் மாணிக்கவாசகர் தமது பேரன்பினால் இறைவனை நினைத்து அழுது, மனம்உருகி, அகம் குழைந்து வழிபடுகின்றார்.
3. இறையருளோடு கலத்தல்
இறையருள் நிலையில் ஆன்மாவானது தானே எதனையும் செய்வதாகக் கருதாமல், இறையருள் செய்விக்கத் தான் செய்வதாகக் கருதிச் செயல்படுகின்றது. குருவாக எழுந்தருளி, தன்னருள் வலிமையால் ஞானவொளி வீசும் அடியவனாகத் தன்னை மாற்றிய சிவனருளை எண்ணி, மாணிக்கவாசகர் வியப்படைகின்றார். இறைவழிபாட்டில் இறையருளோடு கலந்து இன்புறுகின்றார்.
“வேண்டத்தக்கது அறிவோய் நீ வேண்ட முழுதும் தருவோய் நீ” (குழைத்தபத்து, 6)
என இறையருளோடு கலந்து இன்புறும் ஆன்மாவிற்குத் திருவடிப்பேறு உறுதியாகக் கிடைக்கும் என்கின்றார் மாணிக்கவாசகர்.
4. இறையன்பில் உறுதி
தான் சார்ந்ததன் வண்ணமாகவும் எண்ணமாகவும் விளங்கும் ஆன்மாவானது இறைச்சார்பினால் பேரின்பத்தை அடைகின்றது. அது, இறையன்பில் உறுதியாக நிற்கும்போது மேலும் மேலும் பேரின்பத்தையே பெறுகின்றது.
இறைவழிபாட்டில் இத்தகைய உறுதிப்பாட்டுடன் நின்ற மாணிக்கவாசகருக்கு, மேலும் மேலும் துன்பங்களே வந்தன. அவர் அத்துன்பங்களைப் பொருட்படுத்தாமல் நின்றமையால் அவரைப் பார்த்து ஊரார் எள்ளி நகையாடினர்.
“இவ்வாறு ‘பித்தன்’, ‘பேயன்’ என்று ஊரார் எள்ளி நகையாடிச் சிரித்தாலும் மாணிக்கவாசகர் இறையன்பில் உறுதியாக நின்று இறைவன் திருவடிகளைப் பற்றிக் கொண்டார்.

முடிவுரை

இறைவழிபாடு ஒன்றே ஆன்மாவை உயர்நெறியிலும் நன்னெறியிலும் செயற்படுத்திப் பயிற்றுவித்து உய்விக்கின்றது. மன ஒருமைப்பாட்டுடன், வழிபாடு செய்யும் போது உள்ளமும் உடலும் தூய்மையடைகின்றது. இறைவழிபாட்டினால் ஐம்பொறிகளும் அதனதன் படைப்பின் பயனைப் பெறுகின்றன. பரம்பொருளாகிய சிவனைத் தம்முள் பதித்த மாணிக்கவாசகர், பேரின்பத்தில் திளைத்தல், அகங்குழைந்து வழிபடுதல், இறையருளோடு கலத்தல், இறையன்பில் உறுதி முதலான இறைவழிபாட்டு முறைகளால் மனம் ஒன்றிய ஒருமைப்பாட்டு நிலையில் பேரானந்தம் துய்த்தவராக விளங்கியமையை இக்கட்டுரையின் வாயிலாக உணரலாம்.
_____

0 Comments:

Post a Comment

<< Home