Name:
Location: Chennai, Tamilnadu, India

Arulselvan is a staff of the Electronic Media Production and Research Centre of Tamil Nadu Open University, Guindy, Chennai, Tamilnadu. He can be reached at arulselvans@yahoo.com Dr S Angayarkanni is a Tamil Lecturer, working in a private college in Chennai

Wednesday, April 19, 2006

திருமந்திரப் பாடல்களில் திருக்குறள் தாக்கம்

துரை. மணிகண்டன்

சமயத்துறையில் தமிழ் மொழியிலே தோத்திர சாத்திர நூல்களுக்கு மூலமாக இருப்பது திருமூலர் அருளிய திருமந்திரம் ஆகும். பன்னிரு திருமுறைகளில் திருமந்திரம் பத்தாம் திருமுறையாக விளங்குகின்றது. தமிழகத்துச் சித்த பரம்பரைக்கு மூலமாகவும், மிகச் சிறந்த யோகியாகவும் ஞானியாகவும் விளங்கியவர் திருமூலர் ஆவார். இத்திருமந்திர நூலைப் ‘பொருள் நூல்’ என்றும் இயம்புவர். இதன் பெருமை அளவிடற்கரியது. இந்நூலின் கருத்துக்கள், உலக மொழிகளில் சிறந்து விளங்கும் திருக்குறள் கருத்துக்களைச் சார்ந்து அமைத்திருப்பதைப் பற்றி ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
திருமந்திரப் பாடல்கள் ஆண்டுக்கொன்றாக மூவாயிரம் பாடல்கள் பாடப்பட்டது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். திருமூலரால் இயற்றப்பட்ட இப்பாடல்களே திருமந்திரம் என வழங்கலாயிற்று. இதனைத் ‘திருமந்திரமாலை’ என்றும் ‘தமிழ் மூவாயிரம்’ என்றும் அழைப்பார்கள்.
“நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப” - தொல், செய்யுளியல் - 176.
எனும் தொல்காப்பிய நூற்பாவிற்கு இயைய, நிறைமொழி மாந்தராகிய திருமூலரால் இயற்றப் பெற்றமையின் ‘திரு’ எனும் சிறப்பைப் பெற்றுத் ‘திருமந்திரம்’ எனப் பெயர் பெற்றுள்ளது.
நூற் பாகுபாடு
திருமந்திரம் ஒன்பது தந்திரங்களாகப் பகுக்கப் பெற்றுள்ளது. பாயிரத்தைச் சேர்த்துப் பத்துப் பகுதியாக உள்ளன. தந்திரங்கள் அதிகாரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளன. முதல் தந்திரம் 24, இரண்டாம் தந்திரத்தில் 25, மூன்றாவதில் 21, நான்காவதில் 13, ஐந்தாவதில் 20, ஆறாவதில் 14, ஏழாவதில் 38, எட்டாவதில் 45, ஒன்பதாவதில் 27, ஆக மொத்தம் 227 அதிகாரங்கள் உள்ளன.
திருக்குறள் முப்பாலாகப் பகுக்கப் பெற்றுள்ளது. ஒவ்வொரு பாலும் இயல்களாகவும், இயல் அதிகாரங்களாகவும் உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது. அறத்துப் பாலில் பாயிரவியல் 4 அதிகாரங்கள், இல்லறவியல் 20, துறவறவியல் 13, ஊழியல் 1 என நான்கு இயல், 38 அதிகாரங்களை உடையது. பொருட்பாலில் அரசியல் 25, அமைச்சியல் 10, அரண் இரண்டு, கூழ் ஒன்று, படை இரண்டு, நட்பு 17, குடி 13 என ஏழியல்; 70 அதிகாரங்களை உடையது. மூன்றாம் பகுதியான காமத்துப்பாலில் களவியல் 7, கற்பியல் 18, இரண்டியலும் 25 அதிகாரங்களைப் பெற்றுள்ளது.
திருக்குறளிலுள்ள அதிகாரத் தலைப்புக்களில் சில, திருமந்திரத்தில் வேறுபாடின்றிக் காணப்படுகின்றன. திருக்குறளில் முதலதிகாரமாக உள்ள கடவுள் வாழ்த்து, திருமந்திரந்திலும் பாயிரத்தில் முதலதிகாரமாய் உள்ளது. அது போலவே முதல் தந்திரத்தில் சிறிதும் மாற்றமின்றிக் கொல்லாமை, புலால் மறுத்தல், பிறன்மனை நயவாமை, நல்குரவு, அன்புடைமை, கல்வி, கல்லாமை, நடுவு நிலைமை, கள்ளுண்ணாமை என்னும் அதிகாரத் தலைப்புகள் உள்ளன.
இரண்டாம் தந்திரத்தில் பொறைமையுடைமை, பெரியாரைத் துணைக்கோடல் என்னும் அதிகாரங்கள் குறளிலுள்ள அதிகாரங்களின் தலைப்புகளைக் கொண்டுள்ளன.
திருக்குறளில் அறத்துப்பாலில் வரும் நிலையாமை என்னும் அதிகாரம் திருமந்திரம். முதல் தந்திரத்தில் யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, உயிர் நிலையாமை, இளமை நிலையாமை என நிலைகளில் அமைந்துள்ளது. இவ்வாறாகத் திருமந்திர - தந்திரங்களின் தலைப்புக்கள், திருக்குறளின் உட்பிரிவுகளை ஒத்துள்ளன.
கடவுள் வாழ்த்து
திருக்குறள் கடவுள் வாழ்த்தில் உள்ள முதற்குறளின் சொல்லும் பொருளும் திருமந்திரத்தில் ஐந்து இடங்களில் இடம் பெற்றுள்ளன.
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு” - குறள் 1
இக்குறளில் வரும், ஆதிபகவன், எனும் சொல், திருமந்திரத்தில் ‘ஆதி’ என்றும், ‘பகவன்’ என்றும் தனித்தனியாகவும், ‘ஆதி பகவான், ஆதிப்பிரான், வேதப் பகவனார்’ எனச் சிறு மாற்றங்களோடும் காணப்படுகின்றன.
“ஆதிப் பிரான் அமரர்க்கும் பரஞ்சுடர் . . .” (திரு 319)
“அறிவுடையார் நெஞ்சொடு ஆதிப் பிரானும்
அறிவுடையார் நெஞ்சத் தங்கு நின்றானே” (திரு 2364)
எனும் பாடல் வரிகளால் ‘ஆதிப்பிரான்’ என்னும் சொல்லாட்சி இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.
“ஆதியுமாய் அரனாய் உடலுள் நின்ற
வேதியுமாய் விரிந்தார்த் திருந்தான்” (திரு 415)
என்னும் திருமந்திரப் பாடலில் “ஆதி” எனும் சொல்லாட்சி இடம் பெற்றுள்ளது. பகவன் எனும் சொல் திருமந்திரத்தில் இரண்டிடங்களில் பயின்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“படமாடக்கோயிற் பகவற் கொள் நீயில் . . .” (திரு 1857)
“பகவற்கே தாகிலும் பண்பில ராகில் . . .” (திரு 1865)
பகவன்முன் ஆதி சேர்ந்து ‘ஆதி பகவன்’ எனக் குறளில் வருவது போலப் பகவன் முன் வேதம் சேர்த்து ‘வேதபகவன்’ என்னும் சொல் ‘வேதப் பகவனார்’ என வந்துள்ளது. இவை திருக்குறளின் தாக்கமாகவே உள்ளது. மேலும் அறத்தை வலியுறுத்தும் கருத்துக்கள், ஒற்றுமையுடன் இருப்பனவும் காண முடிகிறது.
அறன் வலியுறுத்தல்
“சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு” (குறள் 31)
எனும் குறள், அறம் சிறப்பினையும், செல்வத்தையும் கொடுக்க வல்லது என்கிறது. எனவே மக்களுக்கு அதனைவிட ஆக்கந்தருவது பிறிதொன்றும் இல்லை எனக்கூறுகின்றது.
சிறப்பு - வீடுபேறு என்பர் பரிமேலழகர். இத்திருக்குறட் கருத்தினைத் தழுவித் திருமந்திரம்,
“திறந்தகு முத்தியும் செல்வமும் வேண்டின்
மறந்தும் அறநெறி யேஆற்றல் வேண்டும்
சிறந்தநீர் ஞாலம் செய்தொழில் யாவையும்
அறைந்திடல் வேந்தனுக்கு அறிபிலன் நாமே” (திரு. 244)
என இயம்புகின்றது.
குறளில் உள்ள ‘சிறப்பு’ எனும் சொல்லுக்குத் திருமூலர் ‘முத்தி’ அல்லது ‘வீடுபேறு’ என்று பொருள் எழுதியுள்ளார். தம்மால் இயன்ற அறவினையை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும் என்பதை,
“ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாம் செயல்” (குறள் 33)
எனக் குறள் கூறுகின்றது. இக்கருத்து திருமந்திரப் பாடலிலும் அமைந்துள்ளது.
“யாவர்க்கும் மாம்இறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே” (திரு 252)
இறைவனைப் பச்சிலையிட்டு வழிபடுதலும் பசுவுக்கு ஒரு வாயளவும் அருகம்புல் தருதலும், வறுமை உடையவர்க்கு ஒரு கைப்பிடி சோறிடுதலும் எல்லோரிடமும் இனிய சொற்களைக் கூறுதலும் ஒவ்வொருவராலும் செய்ய முடிகின்ற அறச் செயல் ஆகும். அவற்றைச் செய்யுங்கள் எனத் திருமந்திரப்பாடல் இயம்புகின்றது. அறச்செயல் என்பது “குறளில்” ‘இனியவை கூறல்’ அதிகாரத்தில் மனம் மகிழ்ந்து ஒருவனுக்கு வேண்டிய பொருளினைக் கொடுத்தலினும் அவனைக் கண்டபொழுது முகம் இனியனாய் இனிய சொல்லையும், கூறுவானாயின் நன்று என வந்துள்ளது.
“முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்
இன்சொலி லினிதே அறம்” (குறள் 93)
குறள் கருத்தை ‘மந்திரம்’ தாங்கி எடுத்தியம்பியுள்ளது. இனிய சொல் அறம் என்பன போன்று மனிதன் நடுவு நிலைமையொடு இருக்க வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்துகிறது.
நடுவு நிலைமை
மனிதனின் உயரிய வாழ்விற்கும், புகழுக்கும் முக்கியமானவை நடுவு நிலைமையாகும். மனம் மாறுபட்டு நீதி பிறழ்ந்து தீங்கு செய்ய நேருமாயின், அதுவே தன் அழிவுக் காலத்திற்கு அறிகுறி என்பதை அறிவானாக என்பது நடுநிலைமைக் குறள்
“கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு” (குறள் 116)
என்பதை நடுவு நிலைமைக் குறளில் காணலாம். திருமந்திரம் ‘நடுவு’ என்பதை நடுவு நிலைமை எனும் பொருளில்
“கெடுவதும் ஆவதும் கேடில் புகழோன்
நடுவல்ல செய்தின்ப நாடவும் ஒட்டான்
இடுவதும் ஈவதும் எண்ணுமின் இன்பம்
படுவதும் செய்யிற் பசுவது வாமே” (திரு 268)
எனப் பயன்படுத்தியுள்ளார். ‘நடுவு’ எனும் சொல்லைத் திருமந்திரத்தில் ‘யோகநெறி’ என்றும் பயன்படுத்தியுள்ளார்.
புலால் மறுத்தல்
ஊன் உண்ணாமையை உடைய உடம்பை ‘உயிர் நின்ற உடம்பு’ என்றும், ஊன் உண்டவனை நரகம் கூட ஏற்றுக் கொள்ள வாய்திறக்காது என்றும் கூறுவர் வள்ளுவர்.
“உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்அது உணவார்ப் பெறின்” (குறள் 257)
“உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ணல்
அண்ணாத்தல் செய்யா தளறு” (குறள் 225)
என்ற குறள்கள், ஊன் உண்ணாமையை அறிவுறுத்துகின்றன. இக்கருத்தைத் திருமந்திரமும் புலால் உண்ணுபவரை எல்லாரும் காண எமன் தூதர் பற்றிச் சென்று நரகத்தில் தள்ளப் பின் அதிலிருந்து தப்பிச் செல்லாமல் தவிப்பர் என்றும் கூறுகின்றது,
“பொல்லாப் புலாலை நுகரும் . . . . . .
எல்லாருங் காண இயமன்றன் தூதுவர்
செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில்
மல்லாக்கத் தள்ளி மறித்துவைப் பாரே” (திரு 199)
இங்கு திருக்குறள் கருத்துக்கு ஏற்ப திருமந்திரம் புலாலுண்பார் நரகம் புகுவர் எனும் கருத்தில் ஒத்திருத்தலையும் காண முடிகின்றது.
துறவு
துறவு எனும் அதிகாரத்தில் பேசப்படும் திருக்குறள் கருத்துக்களின் சாயல்கள் திருமந்திரத்தில் இடம் பெற்றுள்ளன.
“பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு” (குறள் 350)
என்ற இக்குறளின் கருத்தினைப்
“பற்றது பற்றின் பரமனைப் பற்றுமின் . . . .” (திரு 298)
எனத் தொடங்கும் திருமந்திரப் பாடல் எடுத்துரைக்கிறது.
“வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது” (குறள் 377)
கோடி கோடியாகப் பொருளை ஈட்டி வைத்தவர்களும் ஊழ் விதித்த அளவிற்கு மேல் நுகர முடியாது என்பது இக்குறளின் பொருள். இச்செய்தியானது அனைவர்க்கும் பொதுவாகக் கூறப்பட்டதாகும். மேலும் ஊழின் பேராற்றலை
“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்” (குறள் 380)
என்று குறள் கூறும். இக்கருத்தைத் தாங்கியே திருமந்திரமும் ஒரே பாடலில் நான்கு இடங்களில் ‘பெருவலி’ எனும் சொல்லை அதே பொருளில் எடுத்தாண்டுள்ளது:-
“விதியின் பெருவலி வேலைசூழ் வையம்
துதியின் பெருவலி தொல்வான் உலகம்
மதியின் பெருவலி மானுடர் வாழ்க்கை
நீதியின் பெருவலி நீர்வலி தானே” (திரு 2030)
எனும் பாடலில் திருக்குறள் கருத்து மிளிர்வதைக் காணலாம். ஊழை வெல்ல நல்ல மனத்துணிவும், நல்ல பண்புகளும் பெற்றிருக்க வேண்டும்.
பண்புடைமை
பாத்திரத்தின் தீமையால் அதனுள் இருந்த பால் கெட்டுப் போகும். அதுபோல் பண்பில்லானிடம் இருந்த செல்வமும் நல்ல செயலுக்குப் பயன்படாது, கெட்டு ஒழியும் என்பதனை,
“பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று” (குறள் 1000)
என்று குறள் புலப்படுத்துகின்றது. திருமந்திரம் இக்குறளினைத் தழுவி “நீதியிலோர் பெற்ற பொன்” எனும் பாடல் அடியில் உவமையாக எடுத்தாண்டுள்ளது.
“நீதியிலோர் பெற்ற பொன்போல் இறைவனைச்
சோதியி லாருந் தொடர்ந்தறி வாரில்லை!” (திரு 2096)
முடிவுரை
திருமந்திரப் பாடல்களில் திருக்குறள் கருத்துக்கள் பொதிந்துள்ளன; திருக்குறள் கருத்துக்களைத் திருமந்திரத்தில் திருமூலர் வலியுறுத்தியுள்ளதைக் காண முடிகின்றது.
____________

0 Comments:

Post a Comment

<< Home