Name:
Location: Chennai, Tamilnadu, India

Arulselvan is a staff of the Electronic Media Production and Research Centre of Tamil Nadu Open University, Guindy, Chennai, Tamilnadu. He can be reached at arulselvans@yahoo.com Dr S Angayarkanni is a Tamil Lecturer, working in a private college in Chennai

Wednesday, April 19, 2006

ஒரு வரலாற்றின் வரலாறு

டாக்டர் இரா. கலைக்கோவன்

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றித் தமிழ் வளர்த்த அறிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் இராசமாணிக்கனார். தமிழுடன் மிகுதியான தொடர்போ, தமிழில் தனித்த ஈடுபாடோ இல்லாத ஒரு தமிழ்க் குடும்பத்தில் பிறந்து, இளம் வயதில் தெலுங்கு மொழியே பயின்று வளர்ந்தவரான அவர், பின்னாளில் தமிழ் வளர்த்த செம்மலாக மலர்ந்தமை வியப்பும் சுவையும் நிரம்பிய வரலாறாகும்.
1907ம் ஆண்டு மார்ச் 12ம் நாள் பிறந்த இராசமாணிக்கனார், தம்முடைய ஒன்பதாவது வயதிலிருந்துதான் தமிழ் பயிலத்தொடங்கினார். தஞ்சாவூர் செயிண்ட் பீட்டர்ஸ் பள்ளியில் ஆறாம் வகுப்புச் சேர்ந்த இவர், தொடர்ந்து பள்ளியிறுதி வகுப்புவரை அங்கேயே பயின்றார். கரந்தை ரா. வேங்கடாசலம் இவர் மீது அன்பு பாராட்டித் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்பித்தார். 1927 மார்ச்சில் பள்ளியிறுதித் தேர்வு முடித்தவர், 1928-ல் சென்னை தியாகராயர் நடுநிலைப் பள்ளியில் தமிழாசிரியரானார். இவர் எழுதிய முதல் நூல் 1930-ல் வெளிவந்தது. அப்போது இராசமாணிக்கனாருக்கு வயது 23.
எட்டு ஆண்டுகள் தியாகராயர் நிடுநிலைப் பள்ளியில் பணியாற்றிய பிறகு, 1936-ல் சென்னை, முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியரானார். அங்கு பள்ளிக்குரிய பாடநூல்களை எழுதி வெளியிட்டதோடு, பி. ஓ. எல் (1939), எல்.டி., (1944), எம்.ஓ. எல். (1945) என்னும் பட்டங்களும் பெற்றார்.
அவருடைய சிறப்புக்குரிய பல நூல்கள் இக்காலத்தே வெளிவந்தன. அவை, ‘மொஹெஞ்சோதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்’ (1941), ‘பல்லவர் வரலாறு’ (1944) ‘சேக்கிழார் ஆராய்ச்சி நூல்’ (1945) ‘சோழர் வரலாறு’ (1947) என்பனவாம். தியாராயர் பள்ளியிலும் முத்தியாலுப்பேட்டைப் பள்ளியிலும் பணியாற்றிய காலத்தில் சுயமரியாதை இயக்கத்தில் பற்றுக் கொண்டு, சீர்திருத்தப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.
தமிழர் திருமணத்தில் சடங்குகள் பெருகிச் செலவுகளும் மிகுந்த நிலையில் பல குடும்பங்கள் கடன் சுமையால் துன்பப் பட்டமையைக் கண்ணுற்ற இராசமாணிக்கனார் மனம் வருந்தினார். அச்சமயத்தில் ‘தமிழர் நல்வாழ்க்கைக் கழகம்’ என்ற அமைப்பு இராசமாணிக்கனாரிடம், ‘தமிழர் திருமண நூல்’ ஒன்றை இயற்றித் தருமாறு வேண்டியது. பழந்தமிழர்தம் எளிய திருமண முறைகளை உரிய சான்றுகளோடு எடுத்துக் காட்டி 1939-ல் அந்நூலை வெளியிட்டார். பலரின் பாராட்டுதலுக்கு உரியதாயிற்று அந்நூல்.
1947 - 1953 வரை விவேகானந்தர் கல்லூரியில் பணியாற்றிவர், ‘சைவ சமய வளர்ச்சி’ என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். இருபத்தைந்து ஆண்டுகால சென்னை வாழ்க்கையில் (1928 - 1952) இராசமாணிக்கனார் ஆற்றிய பணிகளும் அடைந்த வெற்றிகளும் பெருமைக்குரியவை.
நீண்ட காலம் சென்னையில் வாழ்ந்த இராசமாணிக்கனார் 1953ல் மதுரை தியாகராசர் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவரானார். மதுரையில் இருந்தபோது எழுத்தாளர் மன்றம் உருவாகத் துணைநின்றதுடன், நாற்பது நூல்களை எழுதி வெளியிட்டார். அவற்றுள் குறிப்பிட்டத்தக்கவை ‘தமிழ் மொழி இலக்கிய வரலாறு’, ‘தமிழர் திருமணத்தில் தாலி’ என்னும் நூல்கள். தமிழ்நாடெங்கும் பயணித்து அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் இலக்கிய நுகர்வையும் சமய, சமூக சீர்திருத்த மனப்பாங்கையும் மக்களுக்கு ஊட்டுவனவாக அமைந்தன.
இவரது பணிகளைப் பாhராட்டிக் கோயமுத்தூர் திருவள்ளுவர் கழகம் 1956 ஆகஸ்டு 26-ல் பெருமைக்குரிய பாராட்டு விழாவொன்றை அமைத்தது. 1959 செப்டம்பரில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துணைப் பேராசிரியராகப் பொறுப்பேற்ற இவ்வறிஞர் 1967 முடிய அப்பணியில் இருந்தார். பணியிலிருந்த முதல் ஐந்தாண்டுகளில் சங்கத் தமிழ் இலக்கியமான பத்துப்பாட்டை ஆய்வு செய்து, ‘பத்துப்பாட்டு ஆராய்ச்சி’ என்ற பெயரில் நூலாக்கி, பல்கலைக்கழகத்திடம் ஒப்புவித்தார். அவ்வரிய ஆராய்ச்சி நூல் பின்னால் (1970) பல்கலைக் கழகத்தாரால் வெளியிடப்பட்டது.
சமயத்துறையில் இவர் ஆற்றிய பணிகளில் மனம் நிறைந்த சைவத் திருமடங்கள், சைவ வரலாற்று ஆராய்ச்சிப் பேரறிஞர் (1951), ‘ஆராய்ச்சிக் கலைஞர்’ (1955), ‘சைவ இலக்கியப் பேரறிஞர்’ (1963), ‘சைவ நெறிக் காவலர்’ (1959) என்னும் பட்டங்களை வழங்கி மகிழ்ந்தன.
பல்கலைக்கழகங்களில் தலைமைத் தேர்வாளராகவும் பாடத்திட்டக் குழுத் தலைவராகவும் விளங்கிய இவ்வறிஞர் மாணவர் நலத்தில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். ‘தமிழ்ப் பாடத்தில் மாணவர்களுக்கு அவரவர் தகுதிக்குரிய மதிப்பெண்களைத் தருவதில் தயக்கம் கூடாது. இந்த அளவிற்குமேல் உயர்ந்த மதிப்பெண் மொழிப்பாடத்தில் கூடாது எனும் போக்குத் தவறானது. மாணவர்கள் சிறப்பாக விடையெழுதியிருந்தால் உரிய உயரிய மதிப்பெண்களை வழங்கிடல் வேண்டும். அப்போதுதான் தமிழ்ப் பாடத்தைத் தயங்காது தேர்ந்து கொள்ள மாணவர்க்கு ஊக்கம் பிறக்கும்’ என்பது இராசமாணிக்கனாரின் கருத்தாக இருந்தது.
தாம் உழைத்து உயர்ந்ததோடு நிறைவடையாத இராசமாணிக்கனார் தம் துணைவியர் கண்ணம்மாளையும் வித்துவான் பட்டம் பெறச் செய்தார். அவ்வம்மை மதுரையில், பாத்திமா கல்லூரியில் பணியாற்றினார். இத்துணை சிறப்புகளை ஈட்டிப் புகழ் படைத்திருந்த இராசமாணிக்கனார் 26-5-1967 வெள்ளிக்கிழமை அன்று இவ்வுலக வாழ்வை நீத்தார்.

(நன்றி : தினமணி 11-3-2006)
_________

0 Comments:

Post a Comment

<< Home