Name:
Location: Chennai, Tamilnadu, India

Arulselvan is a staff of the Electronic Media Production and Research Centre of Tamil Nadu Open University, Guindy, Chennai, Tamilnadu. He can be reached at arulselvans@yahoo.com Dr S Angayarkanni is a Tamil Lecturer, working in a private college in Chennai

Wednesday, April 19, 2006

வீழ்ச்சியுற்ற தமிழகத்தில் . . . !

முனைவர் ச. சாம்பசிவனார்

[சென்ற இதழின் தொடர்ச்சி . . .]

தமிழ் இலக்கியங்களில், ‘யவனர்’ எனும் சொல், பரவலாகக் காணப்படுவதாம். இச்சொல், கிரேக்க, உரோமானியர்களைக் குறிப்பதாகும். இவர்கள், பாண்டிய நாட்டு அரசவை வாயில்களில், காவல் காத்து நின்றதாகவும் தெரிகின்றது. “யவனர்கள், நல்ல குப்பியில் கொண்டுவந்து கொடுத்த குளிர்ந்த - நறுநாற்றத் தேறலைப் பொன்னாலான கலத்தில் ஏந்திய” செய்தியைப் புறநானூறு கூறும்:
“யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்
பொன்செய் புனைகலத்து ஏந்தி” (புறம் 56 : 18-19)
இவை போன்ற சான்றுகள் எண்ணில் பலவாக உள்ளன. இவற்றால், கிறித்துப் பிறப்பதற்கு நெடும் பல்லாண்டுகட்கு முன்பிருந்து கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரை, தமிழகத்தை ஆண்ட முடியுடை மூவேந்தர்களின் ஆட்சியின் மாட்சியும், தமிழ்மொழி மேன்மையும் தமிழர் நாகரிகமும் ஒருவாறு உணரலாம்.
தமிழக வீழ்ச்சி
ஆனால், இத்தகு ஏற்றமும் உயர்வுங் கொண்ட பண்டைத் தமிழக மூவேந்தர் ஆட்சி, கி.பி. 2ஆம் நூற்றாண்டிற்குப் பின், வீழ்ச்சியுறத் தொடங்கியது. நாட்டின் வீழ்ச்சியால் தமிழின வீழ்ச்சியும்; தமிழின வீழ்ச்சியால் தமிழ்மொழி வீழ்ச்சியும் ஏற்பட்டதில் வியப்பில்லை! இதற்கான காரணத்தை ஆராய்வது ஓரளவு பயனளிக்கும்.
“மதுரைக் கடைச்சங்கம் கி.பி. 2ஆம் நூற்றாண்டின் இறுதியில் முடிவெய்தியது. பின் கி.பி. 9ஆம் நூற்றாண்டின் இடையில், தஞ்சையைக் கைப்பற்றி அரசாளத் தொடங்கிய ‘விசயாலயன்’ வரை, சோழர் செய்திகள் தெரியவில்லை! கி.பி. 4,5ஆம் நூற்றாண்டுகளில், நம் தமிழகம் ‘களப்பிரர்’ என்ற ஒருவகையாரது ஆட்சிக்கு உட்பட்டிருந்தது!” என்கிறார் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார். (‘பிற்காலச் சோழர் வரலாறு’ பக். 4,5)
இக் ‘களப்பிரர்’ பற்றி வரலாற்றாசிரியர்களிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு. எனினும் இவர்களது ஆட்சிக்காலம், ‘தமிழகத்தின் இருண்ட காலம்’ என்பதில் ஐயமில்லை! இக் களப்பிரர் கொடுமைகளினின்று தமிழகத்தை மீட்ட பெருமை, பாண்டியன் கடுங்கோனுக்கு உரியது! இப்பாண்டியனது ஆட்சிக்காலம் கி.பி. 590-620 (கே.கே.பிள்ளை, தெ.இ. வரலாறு)
“பழைய காலம் முதல், கி.பி. 300 வரை, தமிழகம், தமிழ் வேந்தர்களாலேயே ஆளப்பட்டு வந்தது. கி.பி. 300 முதல் கி.பி. 900 வரை பெரும்பகுதி ‘பல்லவர்’ என்ற அயல் அரச மரபினரால் ஆளப்பட்டு வந்தது” என்ற உண்மையை மா. இராசமாணிக்கனார் விரிவாக விளக்குவார் (‘தமிழக ஆட்சி’, ப.1). கி.பி. 900 முதல் கி.பி. 1200 வரை ஆண்ட பிற்காலச் சோழராட்சியில், தமிழ் மீண்டும் புத்துயிர் பெற்றது. பின்னர் முகமதியர் படையெடுப்பு; நாயக்க மன்னர் ஆட்சி; மகாராட்டிரர் ஆட்சி; ஆங்கிலேயர் ஆட்சி என ஒன்றன்பின் ஒன்றாக நம் நாட்டை ஆண்டவர் அயலாரேயாவர்!
இத்தகு வீழ்ச்சிக்கு என்ன காரணம் என எண்ணிப் பார்த்தால் பின்வரும் சில உண்மைகள் புலனாகும்:
தமிழர்களுக்குள் ‘ஒற்றுமையின்மை’யே அடிப்படைக் காரணமாகும். சங்க இலக்கியங்களைக் கூர்ந்து பார்த்தால் இவ்வுண்மை தெற்றெனத் தெரியவரும்.
சேர, சோழ, பாண்டியப் பேரரசர்கள், புகழுடன் நாட்டை ஆண்டவராயினும், அவர்கள் தங்களுக்குள்ளேயே அழுக்காறு கொண்டு அடிக்கடி போர் நிகழ்த்தியுள்ளனர். ‘யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரலிரும் பொறை’ என்ற சேர அரசனை தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்’ பிணித்து வைத்திருந்தான். (புறம். 17) இதே பாண்டியனோடு, சேர, சோழ மன்னர் இருவரும் குறுநில அரசர் ஐவருமாக எழுவர், ஒரு களத்தில் போர் செய்து தோற்றனர். (புறம் 19) ‘பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி’ என்பான், “தண்டமிழ் பொது எனப் பொறாஅன்” (புறம் 51) அஃதாவது, “இத்தமிழ்நாடு மூவேந்தர்க்கும் பொது என்று எவரேனும் கூறினால் பொறுக்கமாட்டான்; நாடு முழுதும் தனக்கே உரிமை என்று எண்ணுவான்” என்பதாம். ‘சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்’ என்பவனும், ‘சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி என்பவனும் ‘போர்ப்புறத்துப் பொருது வீழ்ந்தனர் எனக் ‘கழாத்தலையார்’ என்னும் புலவர் குறிப்பிடுகின்றார். (புறம். 62) இவ்வாறே ‘சேரமான் பெருஞ்சேரலாதன்’ என்பான். ‘சோழன் கரிகாற் பெருவளத்தானோ’டு பொருது, புறப்புண் ஏற்று, அதற்காக நாணமுற்று, வடக்கிருந்தான் என்கிறது ஒரு புறப்பாட்டு. (புறம். 65) ‘சேரமான் கணைக்காலிரும் பொறை’ என்பான், ‘சோழன் செங்கணானோடு’ போர் செய்தான்; தோற்றுப் போனான்; சோழனால் சிறை வைக்கப் பெற்றான்; சிறையில் ‘தண்ணீர் தா’ என்று கேட்கக் காலந் தாழ்த்துப் பெற்றமையால், மானங்கொண்டு, அதனைப் பருகாது உயிர்துறந்தான்! (புறம். 74)
இஃது இங்ஙனமிருக்க, ஒரு குடியிலே பிறந்த மன்னர்கள் கூடத் தங்கட்குள் கலாம் விளைத்த செய்தியும் உண்டு.
சோழன் நலங்கிள்ளி என்பவன், பாண்டிய நாட்டிலிருந்த ஏழு அரண்களை அழித்தான் என்பது தவிரத் தன் தாயத்தாரோடு பகைத்து, அவர்கள் இருந்த ஆவூர், உறையூர் ஆகியவற்றையும் முற்றுகையிட்டான். நெடுங்கிள்ளிக்கும் இவனுக்கும் நடந்த போரைத் தடுப்பதற்காக முன்னின்ற ‘கோவூர் கிழார்’ என்னும் புலவர், “நும்மில் எவர் தோற்பினும், தோற்பது நும் சோழர்குடியே!” என அறிவுரை பகர்ந்ததைப் புறம் கூறும். (புறம். 4.5)
இவ்வாறு, இம்முடியுடை மூவேந்தரும், தமது பேராண்மையைக் காட்டத் தங்கட்குள்ளேயே போர் செய்து மாண்ட வரலாறு ஒருபுறமிருக்க, இம்மூவேந்தரும் ஒன்றுபட்ட ஒருநிலையினையும் காணமுடிகின்றது. ஆனால் “அவ் ஒற்றுமை எதற்கு? எந்த வேற்றுநாட்டு மன்னனைக் கொல்ல?” என்ற கேள்வி எழுந்தால் தமிழர் தலை குனியத்தக்க விடைதான் கிட்டும்! புலவர்களால் ஒருங்கே பாராட்டப்பட்ட ‘பாரி’ என்னும் வள்ளல்மீது அழுக்காறு கொண்ட மூவேந்தரும் ஒன்று கூடினர்; அவனது பறம்பு நாட்டின் மீது படையெடுத்தனர். ஆயினும் வெற்றி பெற இயலவில்லை!
“நளிகொள் முரசின் மூவிரு முற்றினும்” (புறம். 105)
“கடந்தரு தானை மூவிருங் கூடி
உடன்றனி ராயினும் பறம்புகொளற் கரிதே!” (புறம். 110)
என்னும் கபிலர் வாக்கால் இதனை உணரலாம். இம் மூவேந்தரும் வஞ்சனையால் பாரியைக் கொன்றுவிடப், பாரியின் இரண்டு பெண்மக்களும், அழுது அரற்றிய அவலநிலையைப் புறநானூறு படம்பிடித்துக் காட்டுகிறது.
“வென்றெறி முரசின் வேந்தம் எம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே!” (புறம். 112)
என்பது அம்மகளிர் புலம்பல்!
‘சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனு’ம், ‘பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி’யூம் ஒன்று சேர்ந்து இருப்பதைக் ‘காரிக் கண்ணனார்’ என்ற புலவர் கண்ணாரக் கண்டு, அளவற்ற மகிழ்ச்சி கொண்டார். அவர்கள் இருவர்க்கும் ‘செவியறிவுறூஉவாகச்’ சில சொன்னார். அச் சொற்கள், இன்றும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்கவை!
“ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்! இருவீரும்
உடனிலை திரியீர் ஆயின், இமிழ்திரைப்
பௌவம் உடுத்த, இப் பயங்கெழு, மாநிலம்
கையகப் படுவது பொய்யா காதே! . . . .
. . . இடைபுகற்கு அலமரும்
ஏதின் மாக்கள் பொதுமொழி கொள்ளா
தின்றே போல்க! நும் புணர்ச்சி” (புறம். 58)
என்பதே புலவர் அறிவுரை. “நீ (சோழன்) தண்புனல் காவிரிக் கிழவன்! இவனே (பாண்டியன்) பஞ்சவர் ஏறு! நீ, உறையூர் வேந்தன்; இவன், ‘தமிழ்கெழு கூடல்’ வேந்தன். உங்கள் காட்சி, பலராமனும் திருமாலும் ஒன்றாக இருந்தாற் போல் உளது. இதைவிட இனிய எமக்கு உண்டோ? ஒன்று சொல்வேன்; கேட்பீராக! நுமக்குள் ஒருவீர், ஒருவீர்க்கு உதவுவீராக! இந்த நிலையினின்று வேறுபடாமலிருப்பீராயின், கடலால் சூழப்பட்ட உலகங்கள் அனைத்தும் உங்கள் கையகப்படுதல் உண்மை! ஆனால், நும்மிடையே புகுந்து நும்மைப் பிரித்தற்கு அலமரும் அயலோருடைய சிறப்பில்லாத மொழியைக் கேளாதீர்! இன்று போலவே என்றும் நும் நட்பு இருப்பதாக!”
ஒற்றுமையின்றிப் புறங்கூறுவார் பேச்சினைச் செவிமடுத்துத் தமக்குள் போருடற்றி வீணாக மாண்டுமடிந்த வரலாற்றினை இப்புலவர் பெருந்தகையின் அறவுரை எடுத்துக்காட்டுகின்றது. இத்தகு சான்றோர் ஒரு சிலரே அந்நாளில் இருந்தனர் போலும்!
தமிழக மறுமலர்ச்சி
சங்ககாலத்திற்குப் பின் திடுமென வீழ்ச்சியுற்ற தமிழகம், மீட்டும், பிற்காலச் சோழர் காலத்தில் புதுமறுமலர்ச்சி பெற்றது எனலாம். கி.பி. 11, 12-ஆம் நூற்றாண்டுகளில் சோழப் பேரரசு, தென்னிந்தியா முழுவதனையும் தனது குடைக்கீழ் ஆண்டது.
சோழமன்னருள் மிகப் பெரும் புகழ் கொண்டவன் முதலாம் இராசராச சோழனாவான். (கி.பி. 985 - 1014) இவன் தன் படை வலிமையால், காந்தளூர்ச் சாலை (திருவனந்தபுரப் பகுதி) கலம் அறுத்தான்; வேங்கை நாடு, கங்கபாடி, தடிகை பாடி, நுளம்ப பாடி, குடமலை நாடு, கொல்லம், கலிங்கம் முதலாயின தவிர, ஈழமண்டலம், இரட்டபாடி ஏழரை இலக்கம், முந்நீர்ப் பழந்தீவு ஆகிய வெளிநாடுகளையும் வெற்றி கொண்ட வீரவரலாற்றைக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இவனுக்குப் பின்னர் வந்த முதலாம் இராசேந்திரசோழனும் (கி.பி. 1012-1044) தன் தந்தையைப் போலவே, ‘இடைதுறை நாடு’ முதல் ‘வங்காளதேசம்’ வரை வெற்றிகொண்ட மாவீரனாவான்! இவ்வாறே பிற சோழ அரசர்களும் வெற்றி வாகை சூடிப் பெரும்புகழ் கொண்டனர். (பார்க்க : ச. சாம்பசிவனார், ‘கல்வெட்டுக் கருவூலம்’)
மொழி வீழ்ச்சி
முடியுடை மூவேந்தரது ஆட்சியின் போது, “முடியணிந்து செங்கோலாச்சி அரியணையில் அமர்ந்திருந்தாள் தமிழன்னை! அன்னாரது ஆட்சி நிலை குலைந்த போது, அவளின் நிலையும் தாழ்ந்தது. தமிழர் ஒற்றுமையின்மையால், வேற்றவர் வந்து நுழைந்தனர். “வட ஆரியர் சிறு சிறு கூட்டமாகத் தென்னிந்தியாவில் குடியேறினர்; அரசர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றுச் செல்வாக்கோடு விளங்கினர். அவர்கள், தங்கள் பழக்க வழக்கங்களையும், கொள்கைகளையும், தமிழரிடையே புகுத்தினர்” (கே.கே. பிள்ளை, ‘தென்னிந்திய வரலாறு’) இம்மட்டோடு நின்றாரில்லை! ‘வடமொழியே மேலானது’ என்னும் விதையைத் தமிழர் நெஞ்சங்களில் ஆழ ஊன்றி விட்டனர். எதுவாயினும் ‘இது, வடமொழியினின்று வந்தது’ என்று கூறத் தலைப்பட்டனர். தமிழ் எழுத்துக்களினூடே வடசொல்லையும், வடவெழுத்தையும் கலந்து எழுதவும் துணிந்தனர். இதனால் ‘தமிழுக்குக் கேடு’ என்றுணர்ந்த தொல்காப்பியர்,
“வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே!” (தொல். சொல். 401)
என்ற நூற்பாவினால் தமிழுக்கு அரண் செய்தார். வடமொழிப் பெருங்காப்பியங்களைத் தமிழிற் பாடிய கம்பரும், வில்லிபுத்தூராரும் இவ் இலக்கண விதிகளை மீறவில்லை!
‘சமண சமயம்’ இத்தமிழ்நாட்டில் நுழைந்து வேரூன்றிய போது, சமணர்கள், தமிழின்கண்ணே அளப்பரிய வடசொற்களை நுழைத்து விட்டனர். ‘மணிப் பிரவாளம்’ என்ற புதுநடையை - அஃதாவது தமிழும் வடமொழியும் சேர்ந்த சரிபாதிக் கலப்பு நடையைக் கையாண்டனர்.
இம்மட்டோ? வேறு சிலர், தொன்மைத் தமிழகத்தில் தோன்றிய ‘ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர்’ ‘தெய்வப்புலவர் திருவள்ளுவர்’ இவர்களைக் குறித்துக் கட்டுக் கதைகள் புனைந்து, ஆரியப் பார்ப்பனராக்கிவிட்டனர்!

[தொடர்ச்சி அடுத்த இதழில் . . .]

1 Comments:

Blogger ENNAR said...

நன்றாக எழுதியுள்ளீர்கள்

7:28 AM  

Post a Comment

<< Home