Name:
Location: Chennai, Tamilnadu, India

Arulselvan is a staff of the Electronic Media Production and Research Centre of Tamil Nadu Open University, Guindy, Chennai, Tamilnadu. He can be reached at arulselvans@yahoo.com Dr S Angayarkanni is a Tamil Lecturer, working in a private college in Chennai

Wednesday, April 19, 2006

புதுக்கவிதையில் பக்திக்கொள்கை

செ. ரவிசங்கர், எம்.ஏ., எம்.ஃபில்.,

தமிழ்மொழியைப் ‘பக்தியின் மொழி’ என்று அறிஞர் கூறுவர். இந்த அளவிற்குச் சிறப்புப் பெற்று விளங்குவதற்குக் காரணம் வேறு மொழிகளில் இல்லாத அளவிற்குத் தமிழ்மொழியில் பக்திப் பாடல்கள் மிகுதியாக இடம்பெற்றுள்ளன. தமிழ் இலக்கிய காலப்பகுப்பில் ‘பக்தி இயக்க காலம்’ என்று கூறும் மரபும் உண்டு. தமிழ் இலக்கியத்தில் தோன்றியுள்ள எல்லா வகை இலக்கியங்களிலும், கடவுளைப் பற்றிய கருத்துக்கள் நிறைந்துள்ளன. அந்த வகையில் இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய ‘புதுக்கவிதைகளில் கடவுட் கொள்கை’ பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது.
மனிதனும் இறைவனும்
கடவுள் தொடர்பை உணர்தல், உணராமை என்னும் இரண்டும் மனிதனது செயல் நிலையைப் பொறுத்திருக்கின்றன. மனிதன் முயன்று முயன்று உழைப்பானேன். அவன் தன்னை இட்டுப்பிரியாத சத்தியின் தொடர்பை உணர்தல் கூடும். (திரு.வி.க. மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், ப.462) அந்த அளவில் மனிதன் பொருட்டு அமைக்கப்பட்ட சமயநெறியில் நின்றொழுக வேண்டுவது மனிதனின் கடமையாகும். இக்கருத்துக்கள் மனிதனின் தத்துவத் தொடர்பான இறைத்தன்மையை விளக்குகிறது. தத்துவத்தை விடுத்துப் பக்தியை இலக்கியத்தில் காண முடியாது. அந்த அளவிலேயே புதுக்கவிதையிலும் தத்துவத்துடன் கூடிய பக்தி அமைந்துள்ளது.
“இந்துவே திரண்டு வா!
என்றோ
கிருஷ்துவனே கிளம்பி வா!
என்றோ
இஸ்லாமியனே எழுந்து வா!
என்றோ
எழுப்பாதீர் முழக்கம்
மனிதனே இணைந்து வா!
என்று முழங்கி
மானுடத்தை இனியேனும்
மதத்துவப் படுத்துங்கள்!” (மு. மேத்தா, கனவுக்குதிரை, ப. 16)
கவிஞர், ‘மனிதனில் வேறுபாடு காட்டாதே’, மனிதனில் தெய்வத்தைக் காண முற்பட்டு மனித சமுதாயத்தை ஒன்றிணைப்போம்; அப்போது மானுடம் மகத்துவம் அடையும்!’ என்கின்றனர். இந்தக் கருத்தைச் சித்தர் பாடல்களில் காணலாம். “படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில் நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா”. இக்கருத்தையே கவிஞர் முன்னிறுத்தி மனிதர்களை சமயத்தின் பெயரிட்டு அழைக்காதீர் என்கிறார். “வாழ்க்கையில் அனுபவ ரீதியாக அனுபவித்த மெய்ப்பொருள் தத்துவமாகும்” (சோ. ந. கந்தசாமி, தமிழும் தத்துவமும், ப. 1). கவிஞரும் தமது அனுபவ மெய்ப்பொருளைக் காட்டுகிறார்.
பக்தியின் தேவை
காலமாற்றம் அனைத்துக் கூறுகளையும் மாற்றம் அடையச் செய்கின்றது. சமூகம், பண்பாடு, நாகரிகம், மனிதன் உடுத்தும் உடை, உண்ணும் உணவு போன்ற அனைத்தும் மாற்றம் அடைகின்றன. இதில் பக்தியும் அதாவது சமயச் சிந்தனைகளும் மாற்றம் பெற்றுள்ளன. “மக்களை மக்களாக வாழச் செய்ய வழி கோலுவது சமயம். நேர்மை, ஒழுங்கு, நீதி தவறாமை போன்ற நற்பண்புகளை மக்களிடையே விதைப்பது சமயம்”. (சு. பழனியம்மாள், அப்துல்ரகுமான் படைப்புகளில் சமுதாயப் பார்வை, ப. 118).
“பக்தியைக் காட்டினால்
பரமன் மகிழ்வான்
நீங்களோ உங்கள்
சக்தியைக் காட்டுகிறீர்கள்
ஆண்டவன்
சங்கடப்படுகிறான்” (மு. மேத்தா, கனவுக்குதிரை, ப. 16)
இவ்வாறாகக் கவிஞர் பக்தினை கூற முற்பட்டாலும் இன்றைய மக்களின் செய்கையால் மனம் நொந்து சங்கடப்படுகிறார்.
இன்றைய பக்தி நிலை
கடவுள் என்பது மனிதன் நம்புகின்ற ஒரு நம்பிக்கையாகும். அதாவது நல்ல வழியில் தீய எண்ணங்களை விடுத்துச்செல்ல இறைவனின் துணை தேவைப்படுகின்றது என்ற நோக்கத்தில் தான் பல அறிஞர்கள் இறைவனின் மீது பாடல்கள் புனைந்துள்ளனர்.
“மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே!”
என்று திருஞானசம்பந்தர் இந்த உலகில் நல்லபடி வாழமுடியும் என்ற ஆர்வத்தை ஊட்டும் விதமாக இப்பாடலைப் பாடியுள்ளார்.
இந்த நிலை அக்கால சமுதாயம் இருந்த சூழலைக் காட்டுகிறது. ஆனால் இன்று கடவுளின் பெயரால் பணத்தையும் புகழையும் சிலர் தேடிக்கொள் கின்றனர் என்பதைத் தமிழன்பன்.
“குருக்களே தெய்வங்கள் ஆனார்கள்
கோயிலில்லா ஊர்களிலே தெய்வங்கள்
குடியிருக்கப் போனார்கள்” (சென்னிமலை கிளியோ பத்ராக்கள், ப.30)
குருக்கள் இல்லாத ஊர்களுக்குத் தெய்வங்கள் இடம்பெயர விரும்புவதாகக் கூறுகிறார். இது இன்றைய நிலையின் பக்தி வெளிப்பாட்டின் தவறான போக்கினைக் காட்டுகிறது. “இலக்கியம் என்பது சமுதாய நிலைமை -களினின்றும் உற்றெடுப்பது. அந்த வகையிலே அதுவும் வாழ்க்கையிலே ஓர் அம்சமாக அதன் ஓர் அங்கமாக இருக்கிறது. வாழ்க்கையை இயக்கும் மிகப் பிரதானமான சக்தியாக அது இல்லையாயினும் அதுவும் கணிசமான தாக்கத்தை உடைய ஒரு துணை வலுவாக உள்ளது. (முருகையன் இன்றைய உலகில் இலக்கியம், ப. 33) இந்த விதத்தில் தான் புதுக்கவிதையும் பக்தியின் கூறுகளைப் பதிவு செய்கிறது.
மனித எண்ண வெளிப்பாடு
இன்றைய மனிதனின் செயல்கள் தீய எண்ணங்கள், சமுதாய ஒழுக்கக் கேடுகள் போன்ற செய்திகளை எல்லாம் நன்கு அறிந்த கவிஞர்,
“இல்லையென்று தான்
தோன்றுகிறது
இருந்தாலும் ஒரு கேள்வி
கேட்டு வைப்போம்
கடவுளிடம் நீ
இருப்பதால் என்ன பயன்” (தமிழன்பன் கனாக்காணும் வினாக்கள், ப.80)
என்று கேள்விகளைக் கடவுளின் மீதே எழுப்புகிறார். “பொதுவாக இக்காலக் கவிதைகளின் தலைமைப் போக்கினை மூன்றாகப் பிரிக்கலாம்; நடைமுறைச் சமுதாயச் சிக்கல்களைத் தொடுவதற்கே அஞ்சுதல், சமுதாயச் சிக்கல்களை அணுகி ஆராய்தல்; சமுதாயச் சிக்கல்களை அணுகி ஆராய்வதோடு மட்டுமன்றிப் புரட்சிமிக்க மாற்றம் சொல்லுதல் என்பன”. (து. மூர்த்தி, இக்கால கவிதைகள் மரபும் புதுமையும், ப. 1) இந்தக் கருத்தினில் புதுக்கவிதை படைக்கும் கவிஞர்கள் மூன்றாவது கருத்தினையே தமது குறிக்கோளாகக் கொண்டு கவிதைகளைப் படைத்து வருகின்றனர்.
“உலகில் ஒவ்வொரு எழுத்தாளனும் தன்னுடைய எழுத்துக்களின் மூலம் சமுதாயத்திற்கு ஒன்றை வலியுறுத்துவான். எழுதுகிறவர்கள் இந்தச் சமுதாயத்திற்குச் சொல்லுவதற்கு எதுவும் இல்லையென்றால் பிறகு அவர்கள் இந்தச் சமுதாயத்திடம் எதையும் எதிர்பார்ப்பதற்கும் உரிமை இல்லை” (செயப்பிரகாசம் - நாளை விடியலில் ரத்த புஷ்பங்கள், ப. 4) இதனை உண்மைப்படுத்தும் நோக்கமாகவே சமுதாயத்திற்கு ஏதேனும் கருத்தினை கவிஞர்கள் முன் வைத்துக் கொண்டுள்ளார்கள். சமுதாயத்தில் நடைபெறுகின்ற அன்றாட நிகழ்வுகளை பதிந்து வருகின்றனர். இந்தக் கொடுமைகளுக்குக் காரணம் மனிதனாக இருந்தாலும் கவிஞர்கள் கடவுளிடத்தில் முறையிடுவதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
“கடவுளுக்கு
முடி நரைத்த பிறகாவது
தெரியுமா
மனிதனைப்
படைத்ததில் உள்ள
தவறு” (தமிழன்பன், கனாக்காணும் வினாக்கள், ப. 73)
சமுதாயக் கொடுமைகளையும், தீய செயல்களையும் கண்ட கவிஞர்கள் கடவுளைப் பார்த்துக் கேட்கிறார்கள். பொதுவாக எழுத்தாளன் வாழ்பவதும், உணர்வதும் பார்ப்பதும், எல்லாமே சமுதாயத்திலிருந்துதான், ஆகையால் அவனுடைய படைப்புகளும் சமுதாயத்தை அடிப்படையாகக் கொண்டே திகழமுடியும் என்பது உண்மையாகும் படியாக புதுக்கவிஞர்கள் கடவுளைப் பற்றிய தமது படைப்புகளில் எழுதிக்கொண்டு வருகின்றனர்.
தமிழ் இலக்கியங்கள் பல கோணங்களில் இன்று உருவாகிப் பல பரிமாணங்களை அடைந்து வருகிறது. பல மேலைநாட்டுக் கருத்துக்களையும் கோட்பாடுகளையும் உள்வாங்கிக்கொண்டு இன்றைய தமிழிலக்கியம் புதுவிதமான போக்கில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதில் புதுக்கவிதையும்; அவற்றைப் பற்றிய விமர்சனமும், திறனாய்வும், அவ்வாறே வளர்ந்து வருகின்றன.
இந்த நிலையிலும் பக்திக் கொள்கைகளையும்; பக்திக் கருத்துக்களையும் கவிஞர்கள் புதுக்கவிதையில் படைத்து வருவதன் மூலம் நமது பண்பாட்டில் கடவுள் பெறுகின்ற இடத்தைக் காணமுடிகிறது. கடவுளின் கருத்துக்களைத் தவிர்க்க முடியாது என்பதை இக்கட்டுரை விளக்குகிறது. இறைவனை எதிர்த்தும் விமர்சித்தும் பல கவிஞர்கள் கவிதை இயற்றினாலும்,
“இறைவனின் சோதனை பலகோடி அதில்
இதயங்கள் வாழுது போராடி பலர்
நாடுகின்றார் அவன் அருள்தேடி இங்கே
நாளும் நடப்பதெல்லாம் அவன் ஆணைப்படி”
(வ. சிங்காரவேலு, புதுயுகம் மலரட்டும், ப.44)
என்று இறைவனின் மீது நம்பிக்கையும் புதுக்கவிஞர்கள் வைத்துள்ளார்கள். எனவே இறைவனைச் சமுதாயம் மறக்க வாய்ப்பில்லை எனக் கூறலாம்.
__________

0 Comments:

Post a Comment

<< Home